Saturday, August 16, 2008

Kanmoodum velayilum kalai enna kalaiye ( Mahadevi )

மெல்லிசை மன்னர்கள் 50களில் முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் காலம் அது….இப்படம் 1957ல் வந்தது… இச்சமயத்தில் தான் 1957-58 நாடோடி மன்னனும் வெளிவந்தது…ஆனால் அதற்கு இசை திரு எஸ்.எம்.எஸ்… மகாதேவி, மெல்லிசை மன்னர்கள்-எம்.ஜி.ஆர். கூட்டணியில் உருவான மூன்றாவது படம் என்று எண்ணுகிறேன்… ஜெனோவா, குலேபகாவலி போன்ற படங்களுக்குப்பின் வந்தது இது…இப்படத்திற்குப்பின் இந்த அணி வலுப்பெற்றது அடுத்து வந்த படம் மன்னாதி மன்னன்(1960)….மாபெறும் வெற்றி பெற்ற இப்படத்தின் வெற்றிக்கு இசை ஒரு முக்கிய பங்கு வகித்தது…அதே சமயம் எஸ்.எம்.எஸ், ஜி.ராமநாதன், கே.வி.எம். போன்ற ஜாம்பவான்களும் எம்.ஜி.ஆருக்காக இசை அமைத்தனர்….ஆனால் உடனே … பா சம்,ஆனந்தஜோதி, பணத்தோட்டம்,பெரிய இடத்துப்பெண் போன்ற படங்களின் மூலம் எம்.எஸ்.வி-டி.கே.ஆர் நிரந்தர இடத்தை பிடித்தனர்…இச்சமயம் தான் நடிகர்திலகத்தின் பா வரிசை படங்களூம் வந்தன !! என் கருத்தின்படி இந்த காலக்கட்டம் , அதாவது 1960-1970 தமிழ்திரையிசையின் பொற்காலம்….

மக்கள் திலகமும் நடிகையர் திலகம் சாவித்ரியும் இணைந்து நடித்த ஒரு சரித்திர படம் இது ….1957ல் வெளிவந்தது. சாவித்ரி கதாபாத்திரம் முதன்மைபடுத்தப்பட்டது…..முக்கியத்துவம் வாய்ந்தது மணந்தால் மகாதேவி..இல்லையேல் மரணதேவி….என்ற பி.எஸ்.வீரப்பாவின் வசனம் மிகவும் புகழ்பெற்றது… எம்.ஜி.ஆரின் மதுரை வீரன், நாடோடி மன்னன், மகாதேவி, ராஜாதேசிங்கு போன்ற சரித்திரபடங்களுக்கு பாடல்களை எழுதிய கவிஞர் இப்படத்திற்கும் எழுதினார்…. தேனினினும் இனிய குரலுக்கு சொந்தக்காரரான எ.எம்.ராஜாவும் பி.சுசிலாவும் இப்பாடலை மிகச்சிறந்த முறையில் பாடியுள்ளனர்…மலைக்கள்ளனுக்கு பிறகு டி.எம்.எஸ். தான் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான பாடகர்… ஆனால் அங்கங்கே எ.எம்.ராஜா மற்றும் பி.பி.எஸ். அவ்வப்போது பாடினர்…இப்பாடலும் ஒன்று… மாசிலா உண்மை காதலி, மயக்கும் மாலை பொழுதே நீ போ போ, என்று அவருக்காக பாடிய பாடல்கள் மிக குறைவு… இப்பாடலுக்குப்பின் அவர் பாடவேயில்லை..இழப்பு நமக்குதான் என்று தோன்றுகிறது இதை கேட்டபின்..

எம்.ஜி.ஆர்:

கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே

சாவித்ரி: மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழைபோல் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது என் சிலையே கண்மூடும்…. கண்மூடும் வேளையிலும் கலை கண்டு மகிழும் கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே

எம்.ஜி.ஆர்:

தென்பாங்கின் எழிலோடு பொலிகின்ற அழகை சிந்தாமல் சிதறாமல் கண் கொள்ளவந்தேன் சின்ன சின்ன சிட்டுபோல வண்ணம் மின்னும் மேனி கண்டு கண்டு நின்று நின்று கொண்ட இன்பம் கோடி கண்மூடும்….

கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே

சாவித்ரி:

பண்பாடும் நெறியோடு வளர்கின்ற உறவு அன்பாகும் துணையாலே பொன்வண்ணம் தோன்றும்

எண்ணி எண்ணி பார்க்கும்போதும் இன்ப ராகம் பாடும் கொஞ்ஜ நேரம் பிரிந்தபோதும் எங்கே என்று தேடும்

கண்மூடும்…. கண்மூடும் வேளையிலும் கலை கண்டு மகிழும் கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே

பாடலின் தோற்றம் தான் என்ன ? ஒரு இரவில் சாவித்ரி, அழகான நந்தவனத்தில் உறங்கும்போது ஒரு கரம் வந்து அவரை எழுப்ப அதிற்சியோடு பார்க்க அங்கே அவரின் நாயகன் மக்கள்திலகம் இருக்க இருவருக்கும் உற்சாகம் பிறக்கிறது….உடனே எம்.ஜி.ஆர்..பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல் இது… ஒரு அரசகுமாரிகே உரிய தன்மையினை சாவித்ரியும், கம்பீரமான அரசருக்குரிய் தோற்றதுடனும் எம்.ஜி.ஆர் ! மாபெரும் மன்னருக்குரிய பொலிவான நடை ,உடை பாவனை, மற்றும் அவரின் ஆடை அணிகலன்கள்…காதில் குண்டலங்கள் வலது கையில் இரண்டு மோதிரங்கள்…பார்க்கவே கண்கொள்ளாகாட்சி !! ஒரு சரித்திர கதாபாத்திரம் என்றாலே எம்.ஜி.ஆர்-சிவாஜி… இவர்களை விட்டால் வேறு யாராலும் சிறப்பான தோற்றம்,கம்பீரம் கொடுக்கமுடியாது…சாவித்ரி நடனமாட அதை ஒரு ஆசனத்தில் அமர்ந்து , ஒரு சமயம் சாய்ந்து கொண்டே ரசிக்கும் அக்காட்சியினை மீண்டும் மீண்டும் பார்க்கதோன்றும் !! எழிலான ஒரு நந்தவனத்தில் அங்கங்கே புறாக்கள்….இனிமையான் சூழ்நிலை..அழகே உருவான சாவித்ரி….

மென்மையான வயலின் முன்னிசையோடு துவங்கும் இப்பாடல் முழுவதும் அற்புதமான வயலினும், ஹவாய்கிடார், மற்றும் புல்லாங்குழல், தபலா துணைகருவிகள்….ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு தன் திறமையினை காட்டும் ! முன்னிசை, இடையிசை அனைத்தும் வயலின் தான் முன்னணி….அங்கங்கு FILLING , COUNTERMELODY செய்ய புல்லாங்குழல் ! அந்த ஒரு துள்ளல் தபலா !! பாடல் முழுவதும் வயலினுக்கு மெய்மறக்க வைக்கும் துணை !

தென்பாங்கின் எழிலோடு பொலிகின்ற அழகை சிந்தாமல் சிதறாமல் கண் கொள்ளவந்தேன் என்று எ.எம்.ராஜா பாடும்போது நம்மை ஒரு தனி உலகத்திற்கே அழைத்துச்செல்கிறார் !! கற்பனை செய்யமுடியாத சந்தம் ! இடையிடையே புல்லாங்குழல் நம்மை மயக்க வைக்கிறது …. சாவித்ரி ….கண்மூடும்….என்று சொல்லி ஒரு கணம் நிறுத்த..அதற்கு ஒருமுறை ஹவாய்கிடார்/மாண்ட்லின்… மற்றொரு முறை புல்லாங்குழல் ….மெல்லிசை மன்னர்கள் தான் இவர்கள் ! பி.சுசிலாவின் குரலில் தான் என்ன ஒரு இளமை ! இது போன்ற பாடலகளை கேட்பதே அரிது……

No comments: